ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற யோசனை நகைச்சுவைத்தனமானது. அவ்வாறான முயற்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் அதற்கு மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவு கிட்டுமா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மேலும் கூறியவை வருமாறு,
“ இது நகைச்சுவைத்தனமாகும். தமிழர்கள் ஓரணியில் உள்ளனர் என்ற தகவலை மட்டுமே அதன்மூலம் வழங்கலாம். மாறாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று தமிழ் பொதுவேட்பாளரால் ஆட்சிக்குவரமுடியாது. எனவே, முடியாதவொரு விடயத்துக்கு எதற்காக முயற்சி எடுக்க வேண்டும்? இந்த யோசனையை நான் கண்டிக்கின்றேன். ஆதரவு வழங்கப்போவதும் இல்லை.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் ஆதரவு தமிழ் மக்களுக்கு அவசியம். சிலவேளை அனைத்து தமிழர்களும் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தால் அது தேவையற்ற பிரிச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, இது முட்டாள்தனமான முயற்சியாகும். “ – என்றார்.










