தமிழ் மக்களின் மனங்களை நிச்சயம் வெல்வோம் – நாமல்

” போரில் இருந்து வடக்கை மீட்டுவிட்டோம். அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்தும் வடக்கை மீட்டெடுக்கவேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கும் இன்னும் காலம் எடுக்கும். அதுவரையில் பொறுமைகாப்போம். ஆனால், நம்பிக்கையை பெறுவதற்கான போராட்டத்தை கைவிடமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் வடக்குக்கு சென்றுவருகின்றீர்கள். இளைஞர்களை சந்திக்கின்றார். அப்படி இருந்தும் ஏன் இன்னும் அங்கு வாழும் இளைஞர்களின் ஆதரவை பெறமுடியாதுள்ளது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“தெற்கு இளைஞர்களுக்கு இணையானவர்களே வடக்கு இளைஞர்களும். அவர்களிடம் நான் வித்தியாசத்தை காணவில்லை. தேசிய கட்சியொன்றுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை முதலில் நாம் அவர்களுக்கு வழங்கவேண்டும். ஜனாதிபதித்தேர்தலின்போது மாத்திரமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வாக்குகளை பெற முயற்சிக்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவும், சஜித் பிரேமதாசவும் அவ்வாறே வாக்குகளைப்பெற்றனர்.

எமக்கு 6 அல்லது 8 வீதம் கிடைத்தாலும் பரவாயில்லை, தனிவழியில் செல்லவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றோம். எனவே, தேசிய நீரோட்டத்துக்குள் சங்கமிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்கவேண்டும். வாக்கு கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியை கைவிடக்கூடாது.

உதாரணமாக ஜே.வி.பி இளைஞர்களை ஐக்கிய தேசியக்கட்சி கொன்றது. அவ்வாறு செய்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் இணைவதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இருதரப்புகளும் இணைந்துசெயற்படவில்லை எனக்கூறமுடியாது. கடந்தகாலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே ஜே.வி.பி. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர்.

2 ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.தே.க. பக்கம் நின்றனர். ஆனாலும் இதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. எமது அரசியல் பயணத்துக்கு வடக்கு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு 30 ஆண்டுகள் எடுக்கும் என நாம் கூறவில்லை. அதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கவேண்டும்.

குறிப்பாக டயஸ்போராக்கல் இன்னும் தனி நாட்டுக்காக குரல் எழும்பும் நிலையிலும்,, தெற்கிலுள்ள தேசிய கட்சி வடக்கில் அரசியல் செய்யாத நிலையிலும்கூட எமக்கு 10 வீத வாக்ககள் கிடைக்கின்றது. எனவே, வடக்கை கைவிடவேண்டாம் என தெற்கிலுள்ள கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இனரீதியிலான அரசியல் இருக்கவில்லை. தேசிய அரசியலே அங்கு முன்னெடுக்கப்பட்டது. எனவே, தேசிய நீரோட்டத்தில் அவர்களை சங்கமிக்கவைப்பதற்கு வாய்ப்பு வழங்கவேண்டும். எனவே, வடக்கு அரசியலை கைவிடவேண்டாம் என கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles