களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை முதலை இழுத்துச்சென்றுள்ள நிலையில், சிறுவனை தேடும் பணி இன்றும் இடம்பெற்றது.
கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி வீதியை சேர்ந்த10 வயதான டிஸ்ன பெரேரா என்ற சிறுவனையே முதலை நேற்று இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த சிறுவனும், அவரது தம்பியும் தமது பாட்டியுடன் குளிப்பதற்கு சென்றுள்ளனர், பாட்டி துணி துவைக்கும்வரை சிறுவர்கள் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென முதலை வந்து சிறுவனை வாயில் கவ்வி இழுத்து சென்றுள்ளது.
இது தொடர்பில் கடுவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த போது சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருப்பதையும் பலமுறை அந்த முதலை ஆற்றில் மேல் பரப்பிற்கு வந்து சென்றுள்ளதையும் கண்டுள்ளனர்.
சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அவரின் சடலத்தை தேடும் பணி இன்று இடம்பெற்றது.
குறித்த சிறுவனின் தம்பியின் பிறந்த தினம் நேற்றாகும். அதனை அவர்களின் வீட்டில் கொண்டாடுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
