பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது. அவர்களுக்கு அதில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வேலுகுமார் எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான காணி உரிமை வழங்கப்படும். அவ்வாறான இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுவருகின்றன. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
நல்லாட்சியின் கொள்கைத்திட்டங்களை எமது ஆட்சியில் முன்னெடுக்கமுடியாது. பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்கள் விவசாயம் செய்வதற்கு வழங்கப்படும். ஆனால் அதன் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது.” – என்றார் மஹிந்தானந்த அளுத்கமகே.










