மஸ்கெலியா, பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் – கைகலப்புவரை சென்றுள்ளது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த தோட்ட சேவையாளர்கள் இருவரும் தோட்டத் தொழிலாளர்கள் இருவரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோட்ட சேவையாளர்கள் இருவரான உதவி முகாமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தாக்குதலை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம் தோட்ட நிர்வாகத்தினாலும், பெருந்தோட்ட நிறுவனத்தினாலும் வழங்கப்படும் கடமைகளையும் வேண்டுகோளையும் மாத்திரமே நிறைவேற்றி வருவதாகவும் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கும் தமக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்பட்ட போதிலும் கடந்த சில மாதங்களாகவே இரு தரப்பினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஏனெனில் தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாததன் காரணமாக சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் ஊடாகவே தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்ட கம்பெனிகளால் வழங்கப்படும் உத்தரவுக்கு அமையவே தாம் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அதற்கு எதிராகவே தொழிலாளர்கள் தம்முடன் முரண்பாடுகளில் ஈடுபடும் அதேநேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட சேவையாளர்கள் குற்றம் சுமத்தினர்.
நேற்றைய தினம் தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட பிரிவின் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை இன்றைய தினம் தலவாக்கலை தோட்டம் முழுவதும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாது பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் அதே நேரத்தில் தோட்ட சேவையாளர்கள் பணிககு செல்லாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிருபர் – கெளசல்யா