தலவாக்கலை லோகி சந்தியில் கடந்த 21ஆம் திகதி ஆல மரக் கினைகள் வெட்டிய போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததன் காரணமாக துரதிஷ்டவசமாக ஆசிரியர் ஒருவர் பலியானார்.
அதன் பின்னர் வெட்டப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்படாமையினால் அதே இடத்தில் 27ஆம் திகதி மற்றுமொரு விபத்து சம்பவித்ததால் மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவர். காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலைமையில் இன்று வரை வெட்டப்பட்ட முறிந்த திளைகள் வீதியோரமாக கிடப்பதையும் காண முடிகிறது.
தலவாக்கலை நகரின் நுழைவாயிலாகவும் வரலாற்று அடையாளமாகவும் 150 வருடங்களுக்கு மேல் பழமையான ஆலமரத்தை இன்று காண முடியவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று அதிகாலை 2 மணியளவில் குறித்த மரத்தில் எஞ்சியிருந்த கிளையும் முறிந்து வீழ்ந்து விட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர். நேற்று காலை 11 மணியளவில் தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ கதிரேசன் ஆலய பரிபாலன சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் வர்த்தகர்கள் , சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது வழிப்பிள்ளையார் கோவிலை பாதுகாத்தல் மற்றும் வரலாற்று அடையாளங்களை அழியவிடாது எவ்வாறு பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன.
அதன் பிரகாரம் வரலாற்று அடையாளத்தை அழித்தமையை கண்டித்து மார்ச் 8 ஆம் தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களை மூடி தமது எதிர்ப்பை காட்டப் போவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் அரச உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுப்புவதற்காக கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
பல சமயத்தவர்களால் புனித பூமியாக புனித பிரதேசமாக அன்று முதல் மதிக்கப்பட்டு வரும் லோகி சந்தியிலுள்ள வழி பிள்ளையார் கோவில் பொதுவுடமையாக்கப்பட்டு அங்கு புனிதத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்குடன் சகல சமயத்தவர்களும் ஒன்றிணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா










