ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அங்குள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நாட்டைவிட்டு தப்பியோடும் நிலைமையும் காணப்படுகின்றது. இதனையிட்டு கவலைடைகின்றோம் – என்று இலங்கை தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது ஆப்கானிஸ்தான் நிலைவரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதா, தலிபான்களின் ஆட்சியை இலங்கை ஏற்குமா, அங்குள்ள தூதரகம் தொடர்ந்து செயற்படுமா, ஆப்கானில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டயஸ் அழகப்பெரும இவ்வாறு கவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சார்க் வலயத்திலுள்ள சகோதர நாடு என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைவரம் தொடர்பில் உணர்வுப்பூர்வமாகவே பார்க்கின்றோம். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை.
ஆனால் இவ்விவகாரம் குறித்து நாட்டு நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கான நடவடிக்கை இன்று (நேற்று) எடுக்கப்படும்.
ஆப்கான் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நாட்டை விட்டு தப்பிசெல்ல முற்படுகின்றனர். இது தொடர்பில் கவலைடைகின்றோம். சுயாதீன நாடு என்ற அடிப்படையில் இலங்கை சரியான முடிவை எடுக்கும்.” – என்றார்.










