ஸ்தாபகத் தலைவர் வீ.கே.வெள்ளையனின் ஆசிர்வாதத்தோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆளுமையோடு இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் பழனிவேல் கல்யாண குமார் தெரிவித்துள்ளார் .
பொகவந்தலாவ வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ தேர்தல் காலம் என்பதால் பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
ஆனால் எமது மலையக மக்களுக்கு தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யார் உணர்வு பூர்வமாக சேவை செய்தவர் எமது தலைவர் பழனி திகாம்பரம் என்பதை மக்கள் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
மலையகத்திற்கு வீடமைப்பு திட்டம் முதல் கார்பட் வீதி, மலையகத்திற்கான அதிகார சபைகள் அனைத்தையும் கொண்டு வந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது ஏனைய கட்சிகள் பாராளுமன்றத்தில் கூட ஏற்றுக் கொண்டு இருக்கிறது.
இம்முறை இடம்பெறவிருக்கின்ற உள்ளூர் ராஞ்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் கைபற்றி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் ” என குறிப்பிட்டார்.