தீபாவளி விடுமுறை முடிந்து கொழும்பு திரும்பும் மக்கள்; ஹட்டனில் மேலதிக பஸ்கள்

கொழும்பு உட்பட் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்புரிந்து வந்த நிலையில், தீபாவளி பண்டிக்கைக்காக மலையகத்திலுள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீண்டும் பணியிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாகப் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (11) அதிகாலை 2 மணி முதல் முற்பகல் 11 மணி வரை ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி 20 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக அதிகளவான மக்கள் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதால், இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய ஏனைய டிப்போக்களிலிருந்தும் மேலதிக பஸ்கள் ஹட்டனுக்கு வரவழைக்கப்பட்டு, பயணிகளை கொழும்புக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து பயணிப்பதையே விரும்புவதாகவும், நின்றுகொண்டு பயணிக்க விரும்பாத காரணத்தினால் புதிய பஸ் சேவையில் இணைக்கப்படும் வரை ஹட்டன் பஸ் நிலையத்தில் காத்திருப்பதாகவும் பாலித வீரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles