ஹட்டன் பீலி ஹதர பகுதியில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் நேற்று 10ஆம் திகதி விசேட அனர்த்த முகாமைத்துவக் கூட்டமொன்று நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன, நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பா தென்னகோன் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸாரினதும் 114ஆவது இராணுவப் படைப்பிரிவினரதும் ஒத்துழைப்புடன், ஹட்டன் பீலி ஹதர பகுதியில் நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை நேற்று 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கட்டுமானங்கள் அகற்றப்பட்டதன் மூலம் ஹட்டன் நகரிலிருந்து மழைநீர் தடையின்றி வழிந்தோடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் பீலி ஹதர பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தவிர்க்கப்படும் எனவும் ஹட்டன் டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மருந்துகளையும் வழங்கியுள்ளனர்.
