துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சரியா? நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாரத பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.

Related Articles

Latest Articles