மரண தண்டனைக் கைதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் 155இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலரும், தாம் இந்த மனுவில் கையெழுத்திடவில்லை என மறுத்துள்ளனர்.
குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி போதிலும், தான் இதில் கையெழுத்திடவில்லை என மறுத்துள்ளார்.
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இதில் கையெழுத்திடவில்லை என மறுத்துள்ளார்.
அதேபோல, தானும் இந்த மனுவில் கையெழுத்திடவில்லை என ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல, தான் இந்த மனுவில் கையெழுத்திடவில்லை என இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் ஐந்து உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், துமிந்த விடுதலை ஆதரவு நிலைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பகிரங்கமாக இன்று காலை கொழும்பில் அறிவித்தார்.
அப்படியெனில், குறித்த மனுவில் கையெழுத்திடவில்லை என ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஏராளமானோர் தெரிவித்து வரும் நிலையில், அந்த மனுவில் யார், யார் இதில் கையெழுத்திட்டனர் என்ற விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி, சிறையில் உள்ள ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோர முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய மக்களுக்கு, தமது பிரதிநிதிகள் அந்தப் பதவிகளை எதற்காகப் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆவணம் பகிரங்கப்படுத்தப்படும் பட்சத்தில், யார் இதில் கையெழுத்திட்டனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
எது எவ்வாறாயினும், குறித்த கோரிக்கை ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.