துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற பயங்கர பூகம்பம் நிகழ்ந்து 248 மணி நேரத்தின் பின்னர் இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்து 17 வயது இளம் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்படுவோர் பற்றிய நம்பிக்கை இழந்து வரும் நிலையில் தெற்குத் துருக்கியில் இந்த யுவதி காப்பாற்றப்பட்டுள்ளார். 17 வயதான அலைனா ஒல்மாஸ் என்ற அந்த யுவதி கரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள துல்கத்ரொக்லு மாவட்டத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருந்துள்ளார்.
சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி மக்கள் உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவு பூகம்பம் மற்றும் 12 மணி நேரத்தின் பின்னர் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான இரண்டாவது சக்திவாய்ந்த அதிர்வினால் துருக்கியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,187 ஆக அதிகரித்துள்ளது.
அண்டை நாடான சிரியாவில் இந்த பூகம்பத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,800க்கு மேல் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 42,000ஐ நெருங்கியுள்ளது.
பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடபெற்றுவரும் நிலையில் முன்னதாக 228 மணி நேரத்தின் பின்னர் இடிபாடுகளில் இருந்து 13 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான்.
துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்தே முஸ்தபா என்ற அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.