துறைமுக நகரத் திட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உட்பட, சீன நிறுவனங்களால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் போது பொறுத்தப்படும் பெயர்ப் பலகைகளில், தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், அலரி மாளிகையில் நேற்று (17) நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தின் போதே, செந்தில் தொண்டமான் இந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தபோது உரையாற்றிய செந்தில் தொண்டமான் அவர்கள், துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தான் அவதானித்த விடயமாகவே, இந்தத் தமிழ் மொழிப் புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாகவும் சீன நிறுவனங்களின் வேலைத்திட்டங்களின் போது, விசேடமாக கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் போது பொறுத்தப்படும் பெயர் பலகைகளில், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் எடுத்துரைத்தார்.

அத்துடன், நாட்டில் மும்மொழிக் கொள்கையொன்று நடைமுறையில் உள்ள நிலையில், அவற்றுக்கு மரியாதை செலுத்தி, அம்மூன்று மொழிகளையும் பயன்படுத்த உத்தரவிடுமாறும், பிரதமரிடம் செந்தில் தொண்டமான் அவர்கள் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கெப்ரால் அவர்கள், இது தொடர்பில் உடன் அவதானம் செலுத்தி, மும்மொழிக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு, உரிய தரப்பினருக்கு வலியுறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

Related Articles

Latest Articles