தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கத்தை, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பாதீடு தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த யூன் சுக் இயோல், அவசரநிலை இராணுவ சட்டத்தை அமுல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் மீளப் பெற்றார். இதற்கிடையே, இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரசியலமைப்பு நீதிமன்றம், ‘தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இராணுவ சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு வந்த பிறகு ஆர்ப்பாட்டக் காரர்கள் வீதிகளில் கொண்டாடி ஆரவாரம் செய்தனர். 60 நாட்களில் புதிய ஜனரிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.