கேகாலை, மாவட்டத்துக்குட்பட்ட தெரணியகலை – கெஹெல்வல தனியார் தோட்டத்திலுள்ள 33 வயதுடைய ஆணொருவர், பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளரும், கேகாலை மாவட்ட அமைப்பாளருமான பரணீதரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பரணீதரன் மேலும் கூறியவை வருமாறு,
3 பிள்ளைகளின் தந்தையான ஜெயசீலன் என்ற குறித்த நபர் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில்
ஒருநாள் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால் மயக்கமுற்ற அவரை, பொலிஸார் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். பொலிஸ் நிலையத்தில்
நடந்தவற்றை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.

வீட்டுக்கு சென்றஅவர் பச்சை நிற வாந்தி எடுத்ததையடுத்து, அவரின் மனைவி பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், அவரை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர்.
பொலிஸார் தாக்கியதால் இவ்வாறு நடந்தது என கூறவேண்டாம் எனவும், மரத்தில் இருந்து விழுந்துவிட்டதாக கூறுமாறும் அச்சுறுத்தியே தெரணியகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அச்சத்தில் அவரும் அவ்வாறே
கூறியுள்ளார்.
தெரணியகலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் அவர் கரவனல்ல வைத்தியசாலைக்கு
கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு வைத்து அவர் மரத்தில் இருந்து விழவில்லை, தாக்கப்பட்டுள்ளார்
என்பதை வைத்தியர்கள் கண்டறிய, நடந்தவற்றை ஜெயசீலன் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தெரணியகல பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளார். சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சருக்கும் மனோ கணேசன் தெரியப்படுத்தியுள்ளார்.” -என்றார்.










