தெலங்கானா இரசாயன ஆலை வெடிவிபத்தில் 37 பேர் பலி!

 

தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி இரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதுவரை 4 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 143 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆலையில் இருந்த ரியாக்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 32 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

பிரேத பரிசோதனை மற்றும் டிஎன்ஏ மாதிரி சேகரிப்புக்கு உதவுவதற்காக உஸ்மானியா பொது மருத்துவமனையிலிருந்து சிறப்பு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 15 உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, குண்டுவெடிப்பு நிகழ்ந்து 24 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில், 12 பேர் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடும் பணிகள் சம்பவ இடத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் நடந்து வருகின்றன.

Related Articles

Latest Articles