பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம்மீதும், சுகாதார அமைச்சர்மீதும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டிவருகின்றார். மறுபுறத்தில் திசைதெரியாமல் தேசிய மக்கள் சக்தியின் பயணம் தொடர்கின்றது. தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமையும் என விமர்சிக்கின்றனர்.
ஆனால் நாம் தேசிய அரசு அமைக்கமாட்டோம். அதற்கான தேவையும் ஏற்படாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையே எமது இலக்காக இருக்கின்றது. அதற்கேற்ற வகையிலேயே வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவோம். எமது அணியின் பங்களிப்புடன் ஆட்சியமைப்போம்.
அதேவேளை, கொரோனா 2ஆவது அலை ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். கத்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொத்தணி பரவலே ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவோம்.” – என்றார்.