தேசிய பொறிமுறையை செயல்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படக்கூடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா எச்சரித்துள்ளார்.
முன்னாள் படைத்தளபதிகளான சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜயசூரிய மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
” இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் இருவர், கடற்படை தளபதியொருவர் மற்றும் புலிகள் அமைப்பில் இருந்த கருணா அம்மான் ஆகியோருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
எமது நாட்டின் 58 படையினருக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது. அவர்களுக்கு அமெரிக்காவில் விசா வழங்கப்படமாட்டாது என்பதுடன், அந்நாட்டிலுள்ள சொத்துகள் முடக்கப்படும். இதேவழியில்தான் பிரிட்டனும் தற்போது தடை விதித்துள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக தனி நபர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் நாட்டுக்கு எதிராகவும் விதிக்கப்படக்கூடும்.
தடைகள் வருவதற்குரிய சூழ்நிலைகள் எம்மால்தான் உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் உள்ளக பொறிமுறையிலுள்ள பரிந்துரைகள் அமுலாக்கப்படவில்லை. 2015 இல் தேசிய சமத்துவம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை.
பரணகம ஆணைக்குழு உட்பட உள்நாட்டில் பல குழுக்கள் செயல்பட்டுள்ளன. எனினும், மேற்படி ஆணைக்குழுக்களால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி டயஸ்போராக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களுக்கு: அழுத்தங்களை வழங்கக்கூடும். அதனால்தான் இப்படியான தடைகள் வருகின்றன.
பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன. அவை நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் எப்படி தடை விதிக்க முடியும்? இது ஒரு தலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவாகவே அமைந்துள்ளது. விசாரணை நடத்தப்பட்டதா? சாட்சியங்கள் திரட்டப்பட்டனவா? இது தொடர்பில் பிரிட்டனில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கருத்துகள் கோரலாம்.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிராகரிப்பது மட்டும்போதாது, நாமும் பொறிமுறையை செயல்படுத்த வேண்டும். புதிய அரசாங்கம்மீது பிரிட்டனுக்கு நம்பிக்கை உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் உள்ளன. எனவே, உள்ளக பொறிமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிட்டன் தூதரகத்துக்கு விளக்கமளிக்க வேண்டும்.” – என்றார்.
