“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறும்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை அரசியல் சக்திகளே சீர்குலைத்துள்ளன. சிறுபான்மையினர், அவர்கள், இவர்கள் எனக் கூறும் சொல்லாடலையே நாம் நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இலங்கை பிரஜைகள்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்நாட்டில் உள்ள எவருக்கும் இரண்டாந்தர பிரஜை என்ற உணர்வு, நிலை வராது. தமது இனம், மதம், மொழி, வாழும் பகுதி, பாலினம் மற்றும் கலாசாரம் என்பவற்றால் எவரும் இரண்டாந்தர பிரஜைகள் ஆகிவிடமுடியாது.
சம உரிமை என்பது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கலாசா ரீதியாகவும் என அனைத்து வகையிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
வடக்கில் வாழும் சிங்கள மக்களுக்கோ அல்லது தெற்கில் வாழும் தமிழ் மக்களுக்கோ வேறுபாடு இருக்க முடியாது. இப்படியொரு நாட்டை உருவாக்க வேண்டுமெனில் இதுவரை காலமும் எமது நாட்டில் இந்த பிளவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஏற்கவேண்டும். அவற்றை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம உரிமையென்பது சொல்லலவில் மட்டும் இருந்து பயன் இல்லை. தமக்கு சம உரிமை கிடைக்கப்பெறுகின்றது என்பதை மக்கள் உணர வேண்டும்.” – என்றார்.










