” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும்” – விஜித ஹேரத்

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் நிச்சயம் தீர்வு வழங்கப்படும்.” – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மலையகம் 200 தாயகத்திற்கு வலிமை கௌரவமான பிரஜை எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியினால் , இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை நகரில் ஹட்டன் பிரகடனம் மக்கள் மையப்படுத்தும் மக்கள் சபை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், பலாங்கொடை வைத்தியசாலையின் ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி தயாபரி மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பலாங்கொடை பிரதேச இணைப்பாளர் முத்துக்குமார் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் இளைஞர் யுவதிகள் கலந்தக் கொண்டனர்.

நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியினால் தயாரிக்கப்பட்ட மலையகம் தொடர்பான ஆவண திரைப்படம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது .மேலும் ஹட்டன் பிரகடனம் முழுமையாக வாசிக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டது.

இதன்போது உரையாற்றிய விஜித ஹேரத் கூறியவை வருமாறு,

“ இன்று நாட்டின் பொருளாதார சீர்கேட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட தொழிலாளர்கள். அரசாங்கத்தினால் இந்த மக்களுக்கு எவ்விதமான மானியமும் வழங்கப்படவில்லை. மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றார்கள். இன்று மலையகத்தில் அதிகமான மக்கள் போசாக்கு இன்மையினால் பாதிக்கப்படுகின்றார்கள். வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளில் இன்னும் வாழ்கின்றார்கள்.

கல்வி சுகாதாரம் போன்ற வசதிகள் இன்னும் இந்த மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. ஆனால் தேர்தல் காலங்களில் மலையக அரசியல்வாதிகளால் இவர்களின் வாக்கு கொள்ளையடிக்கப்பட்டு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வாங்கிக்கொண்டு அவர்களின் சுகபோக வாழ்க்கையை நடத்துகின்றார்களே அன்றி மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளும் நிச்சயம் தீர்வு வழங்கப்படும். அது மட்டுமல்லாது இந்த நாட்டில் கௌரவமாக வாழக்கூடிய சூழலையும் நாங்கள் ஏற்படுத்துவோம். எனவே தேர்தல் காலங்களில் வழங்கப்படும் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து உறுதியாக செயல்பட்டு உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்காக முன் வாருங்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles