கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர்.
கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர்.
இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.










