” மக்களை அடக்கி, சமூக வலைத்தளங்களை ஒடுக்கி, பணபலத்தை திரட்டியே தற்போதைய அரசு தேர்தலுக்கு தயாராகின்றது. ஆனால் மாபெரும் சக்தியாக கருதப்படுகின்ற மக்கள் சக்தி எங்கள் பக்கமே உள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” ஜனாதிபதி தேர்தல் அடுத்தவருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அடுத்த வருடம் தேர்தலை கட்டாயம் நடத்தியாக வேண்டும். இத்தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசு பண பலத்தை திரட்டிவருகின்றது. கோதுமைமா நிறுவனத்துக்கு இலாபம் உழைக்க வழிவிட்டு அதன்மூலம் பணம் திரட்டப்படுகின்றது, மில்கோ நிறுவனத்தை விற்பனை செய்து அதன்மூலமும் நிதி திரட்டப்படுகின்றது, கிழக்கில் முக்கியமான இடங்கள் வழங்கப்பட்டு அதன்மூலமும் நிதி திரட்டப்படுகின்றது. மஹிந்தவுக்கு பஸில் எப்படியோ அதுபோல்தான் ரணிலுக்கு சாகல ரத்னாயக்க, அவர் தற்போது பணம் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மறுபுறத்தில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டமூலங்களை கொண்டுவந்து தேர்தலுக்கு தயாராகின்றனர். அடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கினால் அது தேர்தலில் பின்னடைவாக அமையும். எனவே, அதனை கட்டுப்படுத்துவதற்கு புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை முன்வைத்து, தேர்தலுக்கு தயாராகின்றனர். இதன்மூலம் மக்களை ஒடுக்குவதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது.
மக்கள் மத்திக்கு வந்து அவர்கள் (ஆட்சியாளர்கள்) தேர்தலுக்கு தயாராகவில்லை. மாறாக பணம் திரட்டியும், மக்களை ஒடுக்கியும், சட்டங்களை கொண்டுவந்து அடக்கியுமே தேர்தலுக்கு தயாராகின்றனர்.
பணபலத்தில் அவர்களுக்கு பின்னால்தான் நாம் நிற்கின்றோம். அவர்களுக்கு ஊடக பலமும் உள்ளது. அரச பலமும் உள்ளது . தேர்தல் வெற்றிக்கு அவற்றை நிச்சயம் பயன்படுத்துவார்கள், ஆனால் இவற்றை எல்லாம்விட மேலான மக்கள் பலம் எம்மிடம் உள்ளது.” – என்றார்.
