” கடந்தகால சம்பவங்களிலிருந்து இந்த அரசாங்கம் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது. இதற்கு இடமளிக்கமாட்டோம். அரசியல் முயற்சியை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் சட்டப்போரை முன்னெடுப்பார்கள்.”
இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி நீதி அமைச்சர் கதைக்கின்றார், இதற்கிடையில் சபாநாயகரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுகின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழு நியமனத்தில் அரசாங்கம் அவசரம் காட்டுவது குறித்து எமக்கு சந்தேகம் உள்ளது. தேர்தலை பிற்போடுவதற்கான நகர்வாகக்கூட இருக்கலாம்.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமக்கு சார்பானவர்களை உள்வாங்கி, அதன்மூலம் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் வகுக்கலாம். புதிய தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, தற்போது உள்ளவர்கள் பதவியில் தொடரலாம் என சட்டம் உள்ளது.
எனவே, தேர்தலை பிற்போட்டு ,அடக்குமுறையை கையில் எடுக்க அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவார்கள். தேர்தலை பிற்போட நாம் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.
