“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கைப்பற்றுவோம்.” – என்று சூளுரைத்துள்ளார் மொட்டு கட்சியின் ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அநுரகுமார திஸாநாயக்க அநுராதபுரத்தை சேர்ந்தவர், அம்பாந்தோட்டையை சேர்ந்த நாமலும் தற்போது இங்கு வந்துள்ளார், எனக்கு பாடம் கற்பிக்கவே வந்துள்ளாராம், எது எப்படி இருந்தாலும் நாம் ஆதரிக்கும் வேட்பாளரே அநுராதபுரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்.
எமது கூட்டணியில் பிரமாண்ட கூட்டத்தை 17 ஆம் திகதி அநுராதபுரம் நடத்தவுள்ளோம். முடிந்தால் இதுபோன்றதொரு கூட்டத்தை நடத்திகாட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சவால் விடுக்கின்றேன். அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
மொட்டு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பக்கமே உள்ளனர், நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையமாட்டோம், அக்கட்சியின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடவும்மாட்டோம்.
மொட்டு கட்சியின் உண்மையான உரிமையாளர்கள் நாம்தான், 100 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது பக்கம் உள்ளனர், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நாமே மொட்டு கட்சியை உருவாக்கினோம். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியை பெறுவோம். அவ்வாறு கட்சி அதிகாரத்தை பெறமுடியாவிட்டால் அந்த பக்கம் உள்ளவர்கள் பெயரளவில் மட்டுமே செயல்பட நேரிடும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன சிறந்த இடதுசாரி தலைவர், அவர்தான் எமது கூட்டணியின் தலைவர், அவரின் வழிகாட்டலுடன் பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்.” – என்றார்.
