” பொதுத்தேர்தலில் எனது சகோதரர் வென்றாலும், தோற்றாலும் மக்களுக்கான எமது சமூகசேவை தொடரும்.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா பிரபுவை ஆதரித்து, ஹட்டன், ரொசல்ல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் அரசியல்வாதி அல்லன், ஒரு கிரிக்கெட் வீரர். கடந்த 22 வருடகாலமாக சமூகசேவையில் ஈடுபட்டுவருகின்றேன். இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும் எமது சேவைகளை தொடர எண்ணியுள்ளேன். கணிணி பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி நிலையம் உட்பட எட்டு கட்டங்களாக எமது சேவைகள் தொடரும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அதனை ஏற்கவில்லை. என்னை போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என ஜனாதிபதி உறுதியாக நம்பினார். இதனால்தான் எனது சகோதரனை அரசியலுக்கு அனுப்பியுள்ளேன்.
எம்மீது நம்பிக்கை இருந்தால் அவருக்கும் ஒரு விருப்புவாக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் எமது சமூகசேவை தொடரும்.” – என்றார்.
அதேவேளை, இதன்போது உரையாற்றிய சனத் ஜயசூரிய,” இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வாக்களிக்காமல், சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களையே மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.” -என்று குறிப்பிட்டார்.