தொடரை தக்கவைக்குமா இலங்கை? இன்று மூன்றாவது போட்டி!

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி–20 போட்டி கென்பராவில் இன்று நடைபெறவுள்ளது.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் 0–2 என பின்தங்கி இருக்கும் இலங்கை தொடர் தோல்வியை தவிர்க்க வேண்டுமானால் ஏஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியமாகும்.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா இரண்டு மாற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்மித்துக்கு பதில் மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டி இருப்பதோடு ஹேசில்வுட் அல்லது கம்மின்ஸுக்கு ஒய்வு வழங்க வாய்ப்பு உள்ளது.

மொயிசஸ் அஹன்ரிக்ஸ் பெரும்பாலும் ஸ்மித்துக்கு பதில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஸ்டார்கிற்கு முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர் அண்மைக்காலத்தில் சோபிக்கத் தவறி வருகிறார். அணியில் மாற்றம் ஒன்றை விரும்பினால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜை ரிச்சட்சனை இன்றைய போட்டியில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்கவுக்கு பதில் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இலங்கை அணியில் வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இல்லை. முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பினுர பெர்னாண்டோ கொரானா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியிலும் களமிறங்க வாய்ப்பு இல்லை.

இன்றைய போட்டி நடைபெறும் கென்பராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இதுவரை இரண்டு டி–20 சர்வதேச போட்டிகளே இடம்பெற்றுள்ளன. உள்ளுர் போட்டிகளில் இந்த மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தபோதும் சர்வதேச போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்டதில்லை. போட்டி நடைபெறுவதற்கு சாதகமான காலநிலையே அங்கு நிலவி வருகிறது.

இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய எட்டு சர்வதேச போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இதில் ஆறு டி–20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கும். அந்த அணிக்கு எதிராக இலங்கை கடைசியாக 2017 ஆம் ஆண்டு கீலோங்கில் இடம்பெற்ற டி–20 போட்டியிலேயே இலங்கை அணி வெற்றியீட்டியது.

Related Articles

Latest Articles