பெருந்தோட்டங்களில் இன்று தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர் இப்பிரச்சனைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று ராஜகிரியவில் உள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பின்னதாக தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தும் வருகின்றனர் . நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்தின்நிறை குறைத்தல், அரைபேர் போடுவித்தல், காவல் தொழிலாளர்களுக்கு போயா, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தொழில் செய்தும் 1 1/2 நாள் பேர் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 22 கிலோவிற்கும் அதிகமாக கொழுந்து பரித்தால் மட்டுமே மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
இதுபோன்ற தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டும் அவர்களுக்கான சலுகைகளும் உரிமைகளும் வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பின் நிற்கின்றன. இதை ஒருபோதும் இ.தொ.கா அனுமதிக்க போவதில்லை. எனவே கம்பனிகள் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற கம்பெனிகளும் தோட்ட நிர்வாகங்களும் முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர் திருமதி அனுஷியா சிவராஜா,இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் ராஜதுரை உபதலைவர்களான துரை மதியுகராஜா, கணபதி கனகராஜ், பி.சக்திவேல், பிரஜாசக்தி பணிப்பாளர் பரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
