ஹெரோ கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வை வழங்குவதற்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த வாரம் கொழும்பில் கடலில் மூழ்கி பலியாகினர். இதனால் குறித்த தோட்டம் சோகத்தில் மூழ்கியது. இளைஞர்களுக்கான இறுதிக்கிரியைகள் நடைபெற்ற தினத்தன்று ஊர் மக்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
இதனால் வெளியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து தோட்ட நிர்வாகம் கொழுந்து பறித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெரோ கீழ்பிரிவு தோட்ட மக்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். தோட்ட நிர்வாகத்துடனும் முரண்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த தோட்டத்துக்கு அவர் நேற்று நேரில் பயணம் மேற்கொண்டார்.
இதன்போது பொதுமக்கள் ஜீவன் தொண்டமானிடம் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்படி மலைகளை சுத்தப்படுத்தி தரும் படியும் தோட்ட நிர்வாகத்தில் இரு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தரும் படியும் வேலை நிறுத்தம் செய்த நாட்களில் சம்பளப்பணத்தை கழிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்
அதற்கு அமைய தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்.இதன்போது பொது மக்களின் நிபந்தனைகளை தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
க.கிசாந்தன்