மல்வத்த பிளான்டேசனுக்குச் சொந்தமான பதுளை – ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தேயிலைக் கொழுந்து நிறுப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாக மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
குறிப்பாக தேயிலைக் கொழுந்து நிறுக்கும் கட்டை ஒருபுறத்தில் சுவரில் பொருத்தியிருக்க, மற்றுமொரு புறத்தில் அதனை தோட்டத் தொழிலாளி தலையில் சுமக்கும் படம், பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், குறித்த தோட்ட கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமர திவாகரவை தொடர்புகொண்டு, இதுகுறித்து எச்சரித்துள்ளார்.
முன்னதாக இதனை மறுத்த தோட்ட நிர்வாகம், இந்தப் படங்களை அனுப்பிவைத்த பின்னர், தமது பக்க தவறை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
கொழுந்து நிறைபார்ப்பதில் தொடர்ச்சியான சிக்கல்கள் இருந்து வரும் நிலையில், மேலும் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகங்கள் சுமைகளை அதிகரிப்பது கண்டித்தக்கதாகும்.