“சம்பள அதிகரிப்பு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அராசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அடிபணிந்துவிட்டதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
“பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை நாம் முன்வைத்தோம். ஆனால் இதனை அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலின்போதும் பொது தேர்தலின் போதும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்னெடுத்தது.
ஆனால் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் பின்னர் 1700 ரூபா சம்பளத்துக்கு இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இன்று வரை தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையும் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கம் கூறும் பதில் என்ன?
1700 ரூ சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமா அல்லது தற்போது இருக்கும் 1350 தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்த அரசாங்கத்தால் முற்று முழுதாக நிராகரிக்கப்படுவார்களா? அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்வதாகவும் கொழும்பில் கடைகளில் வேலை செய்வதாகவும் எந்த அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்தது.
ஆனால் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரிக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் தேர்தல் மேடைகளில் பேசும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவை எவற்றையும் நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை.
அவர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்த வாய்ப்பு அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஏதேனும் இரகசிய தொடர்புகளை பேணுகின்றதா அல்லது அவற்றுக்கு அடிபணிகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.” – என்றார்.