தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்டது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது. இதன்பிரகாரம் அரச விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்கள், தொழில்செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடும் உள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டஏற்பாட்டைமீறி, நயவஞ்சக வேலை சூத்திரம், திட்டமிடல் ஊடாக தொழிலாளர்களின் தொழில்சார் உரிமையை தோட்டக் கம்பனிகள் மறுத்துவருவதுடன், மேற்படி வர்த்தமானி அறிவித்தலைகூட பலவீனமடையச்செய்துள்ளன.
அதாவது அரச விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதுடன், பறிக்கப்படும் கொழுந்தின் அளவுக்கு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. முறையாக பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள்கூட ‘ஒரு நாள் கைக்காசு தொழிலாளர்களாக’ மாற்றப்படுகின்றனர். புதிய நடைமுறை தொடர்பில் தொழிலாளர்களுக்கும் போதிய தெளிவின்மையால் இது தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை.
தாங்கள்தான் பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொண்டு, கம்பனிகளுடன் உறவாடும், அரச பலமுடைய தொழிற்சங்கங்கள் இதனை கண்டுகொள்வதில்லை. கம்பனிகளின் அடாவடிகளை தட்டிக்கேட்பதில்லை. வர்த்தமானி அறிவித்தலைக்கூட பலவீனமானதாக மாற்றியமைத்துள்ள கம்பனிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள சட்டக்கட்டமைப்பை, தொழில் நியதிகளைமீறிச்செயற்படுவதற்கான அதிகாரத்தை கம்பனிகளுக்கு வழங்கியது யார்?
இது தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தெளிவூட்டல்களை மேற்கொண்டு, சட்டரீதியாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தொழிற்சங்க பொறிமுறை செயற்பட வேண்டும். அதனை மையமாக கொண்டு செயற்படுவதற்கான எமது செயற்பாட்டு அணுகுமுறையை விரிவுப்படுத்த வேண்டும்.
அதேவேளை, நெருக்கடியான சூழ்நிலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பை வழங்கிவருகின்றனர். அவர்களின் அந்த தியாக உணர்வை அரசு மதிக்க வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் தொழில் அமைச்சர்கள் இதுவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.
