” தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்க அனைத்து தொழிற்சங்களும் ஒன்றினைய வேண்டும்.” – என்று அழைப்பு விடுத்துள்ளார் மலையக மக்கள் சக்தியின் தலைவரான ராமன் செந்தூரன்.
கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்.
கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது, தனி ஒரு தொழிற்சங்கம் முன்னின்று தனித்து முடிவுகளை எடுத்ததால் சம்பளப் பிரச்சினையை இன்றுவரை தீர்க்க முடியாமல் போயுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.
மலையகத்தில் உள்ள மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டுவருகின்றன. இவர்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 22 கம்பனிகளிடம் பேசி தோட்டத்தொழிலாளர்கள் நியாமான சம்பளத்தினை பெற்றுக்கொடுத்திருக்கலாம். அவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அவர்கள் அரசில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
காலம் காலமாக தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றி ஆடுகின்ற நாடகத்தினை உடன் கைவிட்டு, அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.” – என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் மலையக மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றனர்.
மலைவாஞ்ஞன்










