தோட்டத் தலைவர்களை அடக்க பதுளையில் நிர்வாகங்கள் சதி!

பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் தோட்ட மட்டத் தலைவர்களை மௌனிக்க வைக்கும் வகையிலான செயற்பாடுகளை, பெருந்தோட்ட முகாமைத்துவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

பதுளைப் பகுதியின் சென்-ஜேம்ஸ் பெருந்தோட்டம், ரொக்கத்தன்னை பெருந்தோட்டம், பசறைப் பகுதியின் கல்லுள்ளை பெருந்தோட்டம் ஆகிய தோட்டங்களில், தோட்ட மட்டத் தலைவர்களை வாயடைக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சென்-ஜேம்ஸ் பெருந்தோட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் முன்னனி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் இரு தலைவர்களை (தோட்ட மட்டத் தலைவர்கள்) தோட்ட முகாமைத்துவம், சேவை நீக்கம் செய்தது.

இதனை ஆட்சேபித்து அத் தோட்டத்தைச் சேர்ந்த முன்னூறு தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பினை 25-11-2021ல் (இன்று) தொடக்கம் மேற்கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும்படி, தோட்ட மட்டத்தலைவர்கள் தோட்ட முகாமைத்துவத்திடம் வற்புறுத்தியதையடுத்தே. தோட்ட முகாமைத்துவம், குறிப்பிட்ட தோட்ட மட்டத் தலைவர்களை வேலை நீக்கம் செய்தது.

இது குறித்து, 25-11-2021ல் சென்-ஜேம்ஸ் தோட்ட அலுவலகத்தில் தொழிற்சங்க மட்டத்தில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவுற்றுள்ளன.

வேலை நீக்கம் செய்த தோட்ட மட்டத் தலைவர்களை, மீளவும் வேலைக்கு அமர்த்தும் வகையில், தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
இதே போன்றதோர் நிலையே கல்லுள்ளை பெருந்தோட்டத்திலும் ஏற்பட்டுள்ளது. அத் தொழிலாளர்கள் 13 அதிமுக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். இருநூற்று ஐம்பது தொழிலாளர்கள் இப் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து, தோட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவுற்றுள்ளது.

ரொக்கத்தன்னை பெருந்தோட்டப்பிரிவிலும், தொழிலாளர்கள் அதிமுக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இம்மூன்று தோட்டங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து, பதுளை உதவித் தொழில் ஆணையாளருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 26-11-2021ல் சம்மந்தப்பட்ட தோட்ட முகாமைத்துவங்கள் மற்றும் தோட்ட தொழிற்சங்கங்களுடன் பதுளை உதவித் தொழில் ஆணையாளர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles