தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,000 ரூபா அவசியம் – செந்தில் தொண்டமான் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி!!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரண நிதி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை மேற்கொண்டுவரும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடமும் கோரிக்கை முன்வைக்க இருக்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதால் வசதிகுறைந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் சுற்று நிருபத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றமையே இதற்கு காரணமாகும்.

இலங்கையில் கொவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து நாடு முடக்கப்படும் சந்தர்ப்பங்களில் சுகாதார துறையினரும் தோட்டத் தொழிலாளர்களுமே தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொடுப்பதற்காக தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார்கள்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தோட்டத் தொழிலில் ஈடுபடாமல் இருந்திருந்திருந்தால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கும்.

அத்துடன் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் வசதிகுறைந்த, வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களையும் மலையக தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கும் வழங்கவேண்டும்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு பணி செய்வதன் மூலம் சம்பளம் கிடைக்கப்பெற்றாலும், தற்காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் அந்த மக்கள் பாரியதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

அதனால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவை மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் தெரிவிக்க இருக்கின்றோம். இதுதொடர்பில் நாங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சில தினங்களில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றோம் என்றார்

Related Articles

Latest Articles