” தற்போதைய சூழ்நிலையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது.” என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன், தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்றது எனவும் அச்சங்கள் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஷான் இராஜதுரை கூறியவை வருமாறு,
” முகாமைத்துவம் என்ற ரீதியில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு விரும்புகிறோம். எனினும் யதார்த்தம் என்ன? சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை எமக்குக் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையிலேயே உயர்த்த முடியும். அதனை நாம் நிரூபித்திருக்கிறோம்.
நாம் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்கும்போது 68 ரூபா சம்பளமே வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது சம்பளம் 21 மடங்கால் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனபோதும் உலக சந்தையில் தேயிலைக்குக் கிடைக்கும் விலை 08 மடங்கால் அதிகரித்துள்ளது.
நாம் ஏன் எப்போதும் சம்பளத்தைப் பற்றி மாத்திரம் பேச வேண்டும்? வெளியார் உற்பத்தி முறைமை பற்றி நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். அந்த முறையின் கீழ் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிமான தொகையை தொழிலாளர்கள் சம்பளமாக பெற்று வருகிறார்கள். உற்பத்தி அதிகரிப்புக்கேற்ப அவர்கள் சம்பளம் அதிகமாக பெறுகிறார்கள்.
இந்த நாட்டில் 150 வருடங்களுக்கு மேலாக வரவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவது மாற்றப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்று நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்களில் முப்பது கிலோகிராமுக்கும் அதிகமாக கொழுந்து பறிக்க முடியும் என்பதை நாம் நன்கு அறிவோம். அதற்குரிய கடந்த கால தரவுகள் எம்மிடம் உள்ளன. தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படாத பட்சத்தில் சம்பளத்தை அதிகரிப்பது சிரமம்.” – என்றார்.
நன்றி தமிழன்
