தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு யோசனை வரவேற்கத்தக்கது!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது, அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார். தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டுமென தீர்மானம் எட்டப்பட்டிருந்தாலும் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும்வரை இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதொகா தலைவர் முன்வைத்துள்ளார்.

இதனை வரவேற்று சுப்பையா ஆனந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டுமென்பதில் ஜனாதிபதியாக உறுதியாக உள்ளார். அதனால்தான் மே தினத்தன்று கொட்டகலைக்கு வந்து தொழிலாளர்களுக்கு நற்செய்தியை வெளியிட்டார்.

எனினும், பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் தொழிலாளர்களுக்கு இன்னும் அந்த சம்பள உயர்வு கிட்டவில்லை. இது கவலையளிக்கின்றது. இருந்தபோதிலும் நீதிமன்றம் ஊடாக நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

9 பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பள உயர்வை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. ஆயிரத்து 700 ரூபாவுக்கும் குறைவான சம்பளத்தை ஏற்பதற்கு தோட்ட தொழிலாளர்கள் தயாரில்லை. நாமும் அதற்கு உடன்படமாட்டோம்.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும்வரை 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமானது. அதனை வரவேற்கின்றேன். இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவேன். இந்த கோரிக்கையை ஜனாதிபதி செயற்படுத்துவார் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

ஏனெனில் ஜனாதிபதியின் அபிவிருத்தி நோக்கில பயணத்தில் மலையக மறுமலர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருகின்றது.” – என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles