தான் குடியிருக்கும் லயத்தின் இலக்கமும் பத்து, தனது விருப்பு இலக்கமும் பத்து என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எம்.சந்திரகுமார், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தோட்டத் தொழிலாளியின் மகனான தான் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாவது உறுதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இரத்தினபுரியில் உள்ள 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், 22 ஆயிரம் இஸ்லாமியர்களும், முற்போக்குச் சிந்தனைக்கொண்ட சிங்களவர்களும் தனக்கு வாக்களிக்க இம்முறை தயாராக இருப்பதாகவும் இம்முறை தமது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த முறை 30000 வாக்குகளை பெற்றப்போதும் பாராளுமன்றம் செல்லமுடியாமல் போன துரதிஷ்ட நிலை இம்முறை மாறி இரத்தினப்புரி வாழ் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த விருப்புத் தெரிவாக மாறியிருக்கின்றேன். இன்று இரத்தினப்புரி யில் கல்வி கற்ற சமூகம், நகர வர்த்தகர்கள், இளைஞர்கள், தோட்டப்புற மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவரும் என்னிடம் கரம் சேர்ந்துள்ளனர். எனவே அனைவரதும் ஒத்துழைப்புடன் அவர்களின் பொன்னான வாக்குகளின் மூலம் தோட்ட தொழிலாளியின் பிள்ளையாக நான் பாராளுமன்றம் செல்வது உறுதியாகிவிட்டது.
எனவே எனது வெற்றியில் அனைவரும் பங்கெடுக்குமுகமாக தொலைப்பேசி சின்னம் 10 இலக்கத்திற்கு வாக்களித்து பங்காளர்களாக ஆகும் அனைவரையும் அழைக்கின்றனர் என்றார்.