” இலங்கையில் ‘கசிப்பு’ இருப்பது சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியாது, சாராயம் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராய போத்தலில் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” – என்று கோரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சாரம சம்பத் தஸநாயக்க.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” அதி விசேட சாராய போத்தலொன்றை உபத்தி செய்வதற்கு ஆயிரத்து 200 ரூபாதான் செலவாகின்றது. எனினும், அது 3 ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு போத்தலில் 2 ஆயிரம் ரூபா இலாபம் வைக்கப்படுகின்றது. 2019 இற்கு முன்னரான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சாராய விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ஆளுங்கட்சி குழு கூட்டத்திலும் இது பற்றி கேள்வி எழுப்பினேன். ஐ.எம்.எப். யோசனை என்கின்றனர்.
ஆனால் இலங்கையில் கசிப்பு என ஒன்று இருப்பது ஐஎம்எப்பிற்கு தெரியுமோ தெரியாது. விற்பனை குறைந்தால் எப்படி வருமானம் அதிகரிக்கும்? சாராயம் விற்க வேண்டியதில்லை எனில் விற்க வேண்டாம். ஆனால் அரசுக்கு வருமானம் வேண்டுமெனில் விலை குறைப்பு பற்றி சிந்திக்க வேண்டும். சாராயம் விலை அதிகரிப்பால் கசிப்பு உள்ளிட்டவற்றை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரசுக்கு வருமானம் வரவும் வேண்டும், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி உள்ளிட்ட விடயங்களையும் நிறுத்த வேண்டும். பதுளையில் தோட்ட பகுதிகளில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அப்படியாயின் சாதாரண விலைக்கு சாராயம் வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.










