கொவிட் 19 தொற்றால் தொழில் இழந்துள்ள பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்காக பெருந்தோட்டப் பகுதியிலுள்ள தரிசு நிலங்கள் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டத்தில் அந்த காணிகள் அவர்களுக்கே சொந்தமாக வழங்க வேண்டும் என ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளேன் என பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
லிந்துலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” வெளிமாவட்டங்களில் தொழில் புரிந்து தற்பொழுது தங்களது தோட்டங்களுக்கு திரும்பியுள்ள இளைஞர்கள் தோட்டத்தில் தொழில் செய்ய விரும்பவில்லை. அதே போல விவசாய தொழிலிலும் ஈடுபட விரும்பவில்லை. அவர்கள் வெளிமாவட்டங்களிலுள்ள சுற்றுலா விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் தொழில் புரிந்த இவர்கள் தற்பொழுது வேலையில்லாமல் வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களுக்கு சுற்றுலாத்துறையில் நன்கு அனுபவம் இருப்பதால் தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களை இந்த இளைஞர்களுக்கு சொந்தமாக வழங்கினால் அவர்கள் அந்த காணியில் மலையகத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் தங்குவதற்கான சுற்றுலா விடுதிகள் அமைத்து அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்.
அந்த இளைஞர்களின் வேலையில்லா பிரச்சினையும் நீங்கிவிடும். அனேகமாக வெளிநாடுகளிலிருந்து மலையகத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலையக தேயிலை தோட்டங்களை பார்ப்பதற்கு அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
பெருந்தோட்ட பகுதியிலே அவர்களுக்கு தங்குவதற்கு வசதி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆகையால் பெருந்தோட்ட தரிசு நிலங்களை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு வழங்கும் பொழுது அவர்களுக்கு சொந்தமாகவே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த எதிர்வரும் பொது தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்றார்.
