பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துக்களின் படி தோட்டக் குடியிருப்பு பிரதேசங்களை கிராமமாக்கும் திட்டத்தை வெளியிட்டு வருகிறார். எனினும் அதன் முழுமையான வரைபை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
தோட்டக் குடியிருப்பு பிரதேசம் பெருந்தோட்ட கம்பனிகளின் குத்தகைக்குள் உள்ளடங்கியிருக்கிறது. இதனால் தோட்டங்களில் வாழுகின்ற குடியிருப்பாளர்கள் பல்வேறு வகையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கிறார்கள். அரச காணி சட்டத்தின் சரத்துக்களை பெருந்தோட்ட கம்பெனிகளால் பிழையாக பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
வீடுகளை விஸ்திரிக்கவோ, காய்கறி தோட்டங்களில் சுதந்திரமாக பயிரிடவோ, கால்நடை வளர்ப்பு புத்தரைகளை தேவைக் கேற்றால்போல் பராமரிக்கவோ தோட்ட குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை. தோட்ட முகாமையாளர் நினைத்தால் தோட்டங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றலாம் என்ற நிலைமை இன்றும் காணப்படுகிறது.
இந்நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று மிக நீண்ட நாட்களாக நான் கோரிக்கை விடுத்து வருகிறேன். தற்போதைய ஜனாதிபதி அதற்கு களமமைத்துக் கொடுத்திருக்கிறார். இதை சரியாக பற்றிக்கொள்ள தெளிவான புரிந்துணர்வை தோட்ட குடியிருப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
ஒரு சிலர் அரசியலாபத்துக்காக லயன் அறைகளை சொந்தமாக்கும் நடவடிக்கை என இந்த விடயத்தை உதாசீனம் செய்ய முற்படுகிறார்கள். ஒரு சமூகம் என்ற வகையில் இந்த முன்மொழிவை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகலரையும் வேண்டுகிறேன். தேவை ஏற்படும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும். இதில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டவோ திருத்திக் கொள்ளவோ வாய்ப்புகள் இருக்கின்றன.
மலையகத்திலே அமைக்கப்பட்டு வருகின்ற தனி வீட்டுத்திட்டம் தோட்டக் குடியிருப்பு பிரதேசத்தை கிராமமாக்கும் நடவடிக்கைக்கும் வேறுபாடு இருக்கிறது. தற்போது இருக்கின்ற லயன் அறைகளை உடைத்து தனி வீடுகளாக மாற்றி அமைப்பதற்கு இது தடையை ஏற்படுத்தாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
அத்துடன் கிராமங்களை விஸ்தரிப்பதற்கு குடியிருப்பு பிரதேசங்களை அண்டிய பகுதிகளை அரசுடமையாக்குவதற்கும் தான் தயாரென ஜனாதிபதி கூறியிருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தோட்டங்களில் வீடமைப்புகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் அதற்கான காணி ஒதுக்குவதில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.
தேயிலை பயிர் செய்கைக்கு பொருந்தாத மற்றும் குடியிருப்புக்கு பொருந்தாத இடங்களையே தோட்ட முகாமையாளர்கள் ஒதுக்க முற்படுகின்றனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் வீடுகள் கட்டப்பட்ட போதும் தொழிலாளர்கள் அங்கு குடியிருக்க மறுத்து வருகின்றனர். இது எவரையும் விமர்சிப்பதற்காக சொல்லப்படுகின்ற கருத்தாக எவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எதார்த்தமான உண்மை நிலையை நான் இங்கு முன்வைக்கிறேன். தோட்டங்களில் புதிதாக வீடுகளை அமைக்கும் போது தற்போது இருக்கின்ற குடியிருப்பு பிரதேசத்திற்கு ஒட்டிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். அதையே மக்களும் விரும்புகின்றார்கள்.
தற்போதுள்ள குடியிருப்பு பிரதேசங்களில் வழிபாட்டுத் தலங்கள், மைதானங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள், வாசிகசாலைகள் , பாடசாலைகள் போன்ற பொது பயன்பாட்டு இடங்களும் காணப்படுகின்றன. அதே நேரத்தில் இந்தக் குடியிருப்பு பிரதேசங்களோடு சேர்ந்து குடியிருப்பாளர்களின் காய்கறி தோட்டங்கள், கால்நடைகளுக்கான புத்தரைகள், கால்நடை வளர்ப்புக்கான பட்டிகள் போன்றன இணைந்தே காணப்படுகின்றன. இது எமது கலாச்சார ரீதியிலான கிராமிய பண்புகளை கொண்ட அமைந்திருக்கிறது.
நான் மலையகத்தில் முற்போக்காக சிந்திக்கின்றவர்களை பார்த்து கேட்கிறேன். பெருந்தோட்ட பகுதிகளில் இருக்கின்ற மலைகளின் உச்சிகளிலே பல மைல் தூரத்துக்கு தென்படும் வகையில் 25 , 50 வீடுகளை அமைத்து அவற்றுக்கு புதிய கிராமங்கள் என்று பெயர் வைத்து விட்டால் அங்கு நான் மேற்கூறிய சகல அம்சங்களும் அமைந்திருக்கிறதா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
ஆகவே பெருந்தோட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை சுதந்திரமான கிராமங்களாக பிரகடனப்படுத்தி அதை பெருந்தோட்டக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றி உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட விதிகளுக்குள் உள்ளடக்கிய முறையான கிராமிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும். எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.