பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவங்களுக்கெதிராக சுமத்தப்படும் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், தோட்ட முகாமைத்துவத்தினரால் தொழிலாளர்களுக்கெதிராக சுமத்தப்படும் முறைப்பாடுகளை, பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இத்தகைய பாகுபாடுகள், பாரபட்சங்களுடன் செயல்படும் பதுளை மாவட்ட பொலிஸ் நிலையங்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை பிரதி பொலிஸ் அதிபருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், பதுளை மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து அக்கடிதத்தில்,’ பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை அன்றாடம் எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். தோட்ட முகாமைத்துவதினர்களால் தொழிலாளர்களுக்கெதிரான அடாவடித்தனங்கள், நெருக்கடிகள் உள்ளிட்ட இன்னோரன்ன தொழில் பிரச்சனைகள், குடியிருப்பு மற்றும் வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட காணி பிரச்சனைகள், தனிப்பட்ட வகையில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் ஆகியன தொடர்பான தொழிலாளர்களால் செய்யும் முறைப்பாடுகளை, பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்வதில்லை.
ஆனால், அத் தொழிலாளர்களுக்கெதிராக தோட்ட முகாமைத்துவங்களினால் பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கைகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளினால் அப்பாவித் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
தோட்ட முகாமைத்துவங்களின் இத்தகைய விரும்பத்தகாத செயல்களினால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அசௌகரியங்கள் குறித்து எனது கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.
தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தோட்ட முகாமைத்துவத்தினர் ஆகியோரிடையே நாளாந்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் முறுகல்கள், தொழில் தகராறுகள், குடியிறுப்பு மற்றும் காணி உள்ளிட்ட வீட்டுத் தோட்ட பிரச்சினைகள் ஆகியவற்றினால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பாதிப்புக்களிலிருந்து தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவதற்கு, அவர்கள் பொலிஸ் நிலையங்களையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில், பொலிசாரும் தொழிலாளர்களை பாராம்பட்சங்களுடன் நடாத்தி தோட்ட முகாமைத்துவதினர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது,’மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போன்று’ தொழிலாளர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன், தோட்ட முகாமைத்துவங்களுக்கெதிராக தொழிலாளர்கள், பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் போது, அதற்கான முறைப்பாடுகளையும் பொறுப்பேற்காமல் தோட்ட முகாமைத்துவங்களுடனேயே நல்லுறவாகப் பேசிஇ பிரச்சினைகளை நிவர்த்தி செய்து, கொள்ளும்படியும் பொலிசார் தொழிலாளர்களுக்கு அறிவுரைக் கூறி, அனுப்பிவிடும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆகவே, இச்செயல்பாடுகள் குறித்து, உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, அப்பாவி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கவும், பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் நிலையினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










