முல்லைத்தீவு – மல்லாவி, திருநகர் பகுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, காயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மல்லாவி – திருநகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 12 பேர் கொண்ட நண்பர்கள் குழாம் மதுபான விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இருவரும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் கூறினர்.
மல்லாவி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
