உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐ.ம.ச. தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறுவதற்கு தடையாக உள்ள காரணிகளை அரசாங்கம் சீர்செய்ய வேண்டும். அந்தவகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க முற்படுவதற்கு பதிலாக பிரதி பாதுகாப்பு அமைச்சரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். விசாரணைகளில் அவர் குற்றவாளியா அல்லது இல்லையா என்பது நிரூபனமாகும்.
இது தொடர்பில் அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை அரசாங்கம்மீது சுமத்துவதற்கு எதிரணி முற்படுகின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். எமக்கு அவ்வாறு எந்தவொரு நோக்கமும் இல்லை. பொறுப்புக்கூற வேண்டிய தரப்புகளை அடையாளம் கண்டு, நீதியை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.”
-என்றார்.