நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் நாளை


நல்லூர் கந்தன் ஆலய
கொடியேற்றம் நாளை

– இன்று கொடிச்சீலை கையளிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காகச் சம்பிரதாயபூர்வமாகக் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன்படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்து. கொடிச்சீலை நல்லூர் ஆலயப் பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய மகோற்சவக் கொடியேற்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறும்.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெற்று, மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

Related Articles

Latest Articles