நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை மேயில் முன்வைப்பு!

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகிவருகின்றோம் – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் கலைக்க முடியும். எனினும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாளைவேண்டுமானாலும் அதனை கலைக்க முடியும் எனவும் சட்டத்தரணியான உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டத்தை அரசு முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியனவும் தீர்வு திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை.

முழு நாடும் சரியான பாதைக்கு எனும் வேலைத்திட்டத்தை நாமே முன்வைத்துள்ளோம். சரி, எதிரணிகளை விடுவோம், தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டியது அரசின் கடப்பாடாகும். அதனை செய்யாவிட்டால் அரசு பெயில் என்றே புலப்படும்.

நாட்டு மக்களை சாகடிக்கும் இந்த அரசுக்கு ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்குவதா அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு சென்று நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய தரப்புக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே இருக்கின்றது. அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த அரசு வசம் தற்போது 124 ஆசனங்களே தற்போது உள்ளன. அதில் 12 பேர் ஆதரவு வழங்கினால் அரசின் சாதாரண பெரும்பான்மை இல்லாமல் போகும். சிலவேளை வரப்பிதசாதங்களுக்காக எமது அணியில் உள்ள சிலர் முடிவை மாற்றலாம். ஏனெனில் அரசியலில் எதுவும் நடக்கலாம். எனவே .12 என்ற இந்த இலக்கை அடைய நாம் 36 பேரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதம்வரும்போது உக்கிரமடையும். அப்போது மக்களே நாடாளுமன்றத்தை கலைக்குமாறுகோருவார்கள். அப்போது நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை முன்வைக்க எதிர்பார்க்கின்றோம்.

அரசமைப்பின் பிரகாரம் இரண்டரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஆனால் நாடாளுமன்றம் நினைத்தால், நாளை வேண்டுமானாலும் தன்னை கலைத்துக்கொள்ள முடியும். இந்த யோசனையை நிறைவேற்றிக்கொள்வதற்கு சாதாரண பெரும்பான்மையே (113 ஆசனங்கள்) போதும். அதாவது 113 வும் தேவையில்லை.
வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு இருந்தால் போதும். அதாவது 20 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்று 11 பேர் ஆதரித்தால் அந்த இலக்கை அடையலாம்.

அதேவேளை, இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதை தடை செய்வதற்கான அரசமைப்பு திருத்தத்தை நான் அடுத்த மாதம் முன்வைப்பேன். தனிநபர் சட்டமூலமாக இது முன்வைக்கப்படும்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நீதிபதிகள், தூதுவர்கள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை செய்யுமாறு இதன்மூலம் கோரப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles