“அறகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி தவறான அரசியல் தீர்மானமாகும். அதனை நாம் அனுமதிக்கமாட்டோம்.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான வசந்த முதலிகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அறகலய காலத்தில் பல போராட்டக்காரர்கள் இருந்தனர். காலி முகத்திடம் செயற்பாட்டுக்குழு என ஒன்று இருந்தது .அக்குழுவே முடிவுகளை எடுத்தது. நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது தொடர்பில் இக்குழுவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒரு சிலரின் தேவைக்காக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம். அது காலி முகத்திடல் செயற்பாட்டுக்குழுவின் நடவடிக்கை அல்ல. அது அரசியல் ரீதியில் தவறானதொரு முடிவாகும். அது கூட்டு முடிவு இல்லை என்பதால் நாம் உடன்படவில்லை.
வன்முறையை என்றும் நாம் எதிர்க்கின்றோம். ஏப்ரல் 9 நாம் போராட்டக் களத்துக்கு வந்தோம். மே 9 ஆம் திகதிவரை எதுவும் நடக்கவில்லை. மஹிந்த ராஜபக்ச தரப்புதான் வன்முறையை தூண்டியது. அதற்குதான் மக்கள் தரப்பில் இருந்து பதில் வழங்கப்பட்டது.” – என்றார்.










