நாடாளுமன்ற அமர்வு நிறுத்தம் – அடுத்து என்ன நடக்கும், நடைமுறைகள் எவை?

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கசவால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும்.

சபைக்கு தலைமை தாங்கி புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவேண்டும். அன்றைய தினம் அவரின் கொள்கை விளக்க உரை இடம்பெறும்.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்படுவதற்கு முன்னார், நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் – புதிய அமர்வின் ஆரம்பத்தில் அக்கிராசன உரை இடம்பெறும். இதுமீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஆனால் தற்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. எதிரணிகள் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் பிரிதொரு நாளில் அது பற்றி சபை ஒத்திவைப்புவேளை விவாதம் நடத்தப்படலாம்.

அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாக வேண்டும். அதற்கான திகதியும் குறித்தொகுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியால் இவ்வாறு நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டாலும் அக்காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிநிலை பாதுகாக்கப்படும். சபாநாயகரும் தொடர்ந்து செயற்படுவார்.

நாடாளுமன்றத்தில் ஏற்கனவே செயற்பட தெரிவுக்குழுக்கள் புதிய அமர்வின் ஆரம்பத்தில் மறுசீரமைக்கப்படும். நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டாலும் உயர் பதவிகளை அங்கீகரிப்பது தொடர்பான அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து இயங்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்திலும் நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles