நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரும் பிரேரணையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் – என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் நடைபெற்று, நாடாளுமன்றம்கூடிய முதல் நாளில் இருந்து இரண்டரை வருடங்கள் முடிந்ததும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இதன்படி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைத்தால் 2023 பெப்ரவரி மாதத்துக்கு பின்னர் எந்நேரத்திலும் அவரால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்றத்தை கலைக்ககோரும் பிரேரணையொன்றை சபையில் முன்வைத்து அதனை உரிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால், அதனை ஏற்று செயற்பட வேண்டிய நிலை நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு ஏற்படும்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இதற்கான பிரேரணையை முன்வைக்க தமது கட்சி தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். இதற்கு கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். அவ்வாறு இல்லாவிட்டால் வேறு கட்சியொன்று இவ்வாறான பிரேரணையை முன்வைத்தால் அதற்கு ஆதரவு வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியவை வருமாறு,
” நாட்டை ஆட்சி செய்பவர்கள் மக்கள் ஆணையை பெற்றவர்களாக இருக்க வேண்டும். தற்போதைய அரசுக்கு வழங்கிய ஆணையை மக்கள் மீளப்பெற்றுவிட்டனர். எனவே, கட்டாயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். இதனை நாம் ஆரம்பம் முதலே வலியுறுத்திவருகின்றோம்.
மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியனதவிர, ஏனைய கட்சிகள் தேர்தலை கோரியுள்ளன. ” – என்றார்.










