” தமக்கு நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு தோட்டத் தொழிலாளர்கள் எங்கு கேட்டார்கள் என தெரியவில்லை. இன்று ஆயிரத்து 700 ரூபா போதாது. நாட் சம்பளமாக 3 ஆயிரம் ரூபா கிடைக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
” கூட்டு ஒப்பந்தமா, சம்பள நிர்ணய சபையா அல்லது இலாப பங்கீட்டு முறையா என்பது பிரச்சினை இல்லை. உழைக்கும் மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும். விலைவாசி அதிகரித்துள்ளது. தற்போது அவர்களுக்கு வாழக்கூடிய வகையில் சம்பள உயர்வு அவசியம் என்பதே முக்கியமாகும். இதனை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கும் திட்டத்தை அவிசாவளையில் இருந்து ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன். அத்துடன், காணி உரிமை வழங்கும் விடயத்தை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு வழங்கவும்.
தோட்டத் தொழிலாளர்களை கூலித்தொழிலாளர்களாக வைக்காமல், பங்காளர்களாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு வாழ்வதற்கு 10 பேர்ச்சஸ் அவசியம். வாழ்வாதாரத்துக்கும் நில உரிமை அவசியம். ” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.










